வீதி விபத்துக்களால் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 42 செக்கன்களுக்கு ஒரு முறை மரணமொன்று ஏற்படுகிறது.

 

 


வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.  

கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்ற “Safe Roads – Safe Children” சர்வதேச மாநாட்டில் புதன்கிழமை (01) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் மருத்துவச் சங்கத்தின் (SLMA)  வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்கான நிபுணத்துவ குழுவினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  வீதி விபத்துக்களால் தவிர்க்க முடியாத வகையில் நேரும் சிறுவர் மரணம், வாழ்நாள் முழுவதுமான அங்கவீனம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, அதற்காக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, சட்டம் மற்றும் ஒழுங்கு உள்ளிட்ட துறைகளின் பணிகள் தொடர்பிலும் பல சுற்றுப் பேச்சுகள் இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்காக அழைப்பு விடுக்கப்பட்ட வேளையில்,  வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்துவதற்கான குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசித்தோம். அது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தின் தலைமையின் ஜனாதிபதியினால் நிறுவப்பட்ட உயர்மட்ட குழு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம் என்றும் சாகல ரத்னாயக்க தெரிவித்தார். 

இங்கு பல பிரச்சினைகள் உள்ளன. முதலில் கவனமின்றி வாகனம் செலுத்துதல். அடுத்தது நாம் பயன்படுத்தும் முச்சக்கரவண்டி போன்ற சில வாகனங்கள் உரிய பாதுகாப்பு தரம் உறுதிப்படுத்தப்பட்டதாக இல்லாமல் இருத்தல். ஒரே இரவில் செய்ய முடியாவிட்டாலும் மேற்படி சவாலை எவ்வாறு வெற்றிக்கொள்ள முடியும் என்பதை அறிய வேண்டும்.

பெருமளவான மக்களின் வாழ்வாதாரமாக முச்சக்கர வண்டியே காணப்படுகிறது. பலருடைய போக்குவரத்து தேவைகளும் அதன் மீதே தங்கியுள்ளது. அதனால் நாடு பொருளாதார ரீதியாக பலமடையும் வரையில் முச்சக்கர வண்டிகளை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதற்கான திட்டமொன்று அவசியம்.  அதற்காக சிறிது காலம் தேவைப்படும் என்றார். 


வீதி விபத்துக்களால் உலகின் ஏதாவது ஒரு இடத்தில் 42 செக்கன்களுக்கு ஒரு முறை மரணமொன்று ஏற்படுகிறது.  இருப்பினும் உயர் வருமானம் ஈட்டும் நாடுகளில் வீதி விபத்துக்கள் காரணமான ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது. 

இலங்கையில் வீதி விபத்துக்கள் காரணமாக 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 115 சிறுவர் மரணங்கள் இடம்பெற்றுள்ளன. 15-44 இளைஞர்களே வீதி விபத்துக்களில் இறக்கின்றமை அல்லது அங்கவீனமாவதை காண முடிகிறது. அத்தோடு வருடாந்தம் 3000 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழப்பதோடு அந்த எண்ணிக்கை வருடாந்தம் அதிகரிப்பை காட்டுக்கிறது.    

அவற்றை ஒப்பீட்டளவில் பார்க்கும் போது எதிர்காலத்தில் ஆயிரக்கணக்கிலான மரணங்களும், அங்கவீனமடைதலும் வீதி விபத்துக்களினால் நிகழ முடியும் என்பதோடு, அதனால் பல பில்லியன் ரூபாய்களை நாடு இழக்க நேரிடும்.