மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் அங்கு உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது 47வது நாளாகவும் இன்றும் நடைபெற்று வருகின்றது.
சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினமும் கால்நடை பண்ணையாளர்களின் குடும்பம் சகிதமாக பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது மேய்ச்சல் தரை காணிகளில் தொடர்ச்சியான அத்துமீறல்கள் முன்னெடுக்கப்படும் நிலைமையே காணப்படுவதாகவும் ஜனாதிபதி தமக்கு வழங்கி உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
தமது மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கையெடுக்காத பொலிஸார் தமது கோரிக்கையினை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் கவலை தெரிவித்தனர்.
மயிலத்தமடு,மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்கள் அப்பகுதியில் பல்வேறு அட்டூழியங்களை செய்துவருவதாகவம் வாய்பேச முடியாத கால்நடைகளை கொடுமைப் படுத்தி வருவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
இதுவரையில் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில் தாம் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளதாகவும் பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.