காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரிய ஆலோசகர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

 


காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரிய ஆலோசகர் வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் சேவையாற்றி வந்த   அட்டாளைச்சேனை பிரதேசத்தினைச் சேர்ந்த விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி அதிகாலை தனது விவசாயக் காணிக்கு சென்று கொண்டிருந்த போது காட்டு யானைகள் சில வழிமறித்து இவரை தாக்கியுள்ளன.

அட்டாளைச்சேனை சம்புக்களப்பு வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அதிகாலை வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இவர் காட்டு யானைகளைக் கண்ணுற்று மோட்டார் சைக்கிளை பாதையில் நிறுத்தி வைத்து விட்டு அருகிலிருந்த கால்வாய்க்குள் இறங்கி நின்றுள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக யானைகளின் நடமாட்டத்தினை காணாததால் வீதிக்கு அவர் வந்த வேளையில், மரங்களின் பின்னால் மறைந்து நின்ற யானைகள் அவரை தாக்கி தூக்கி வீசியுள்ளன. இதனால் பலத்த காயங்களுக்கு இலக்கானதுடன், இவரது கால் கைகளுக்கும் உடைவு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இதனைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இவர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு கடந்த 12 தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில்  உயிரிழந்துள்ளார்.