போலியான மலேசிய விசாக்களை பயன்படுத்தி தப்பிச் செல்ல முற்பட்ட மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


போலியான மலேசிய விசாக்களை பயன்படுத்தி மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட மூன்று பங்களாதேஷ் பிரஜைகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு எல்லை அமுலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 41, 37 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும், அனைவரும் பங்களாதேஷ் பிரஜைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து வருகை வீசா மூலம் இலங்கை வந்துள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் இந்தியாவின் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

விமான நிலைய அனுமதி நடவடிக்கைகளுக்காக அவர்கள் சமர்ப்பித்த விசாக்கள் மற்றும் பிற ஆவணங்கள் குறித்து சந்தேகம் கொண்ட விமான நிலைய அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமுலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் அவற்றைப் பரிந்துரைத்துள்ளனர்.

தொழில்நுட்ப சோதனையில், இந்த மலேசிய விசாக்கள் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.