போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


 

கற்பிட்டி - இரம தீவு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 இலட்சத்து 70 ஆயிரம் Pregabalin எனும் வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி - நுரைச்சோலை பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய கடற்படையின் சிறிய கப்பல் பிரிவினர் , கற்பிட்டி - இரமதீவு பகுதியில் இன்று மாலை மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த தீவுப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிங்கி  இயந்திர படகு ஒன்றினை பரிசோதனைக்கு உட்படுத்திய போதே குறித்த மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இயந்திர படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பெட்டிகளில் குறித்த மாத்திரைகள் காணப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 5 இலட்சத்து 70 ஆயிரம் போதை மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக புத்தளம் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.