உலக உணவுத் திட்டத்தின் கீழ் "பாடசாலை மாணவர்களுக்கான உணவூட்டல்" நிகழ்ச்சித் திட்டம்!!








உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போஷாக்கான உணவு வழங்கல் திட்டத்திற்கு அனுசரணை வழங்கும் உலக உணவுத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் "வீட்டில் வளர்க்கப்பட்ட உற்பத்திகளைப் பயன்படுத்தி பாடசாலைகளுக்கான உணவூட்டல் (Home Grown School Food Feeding Programme) " நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாவட்ட திட்டமிடல் பிரிவின் ஒருங்கிணைப்பில் அமுல்படுத்தப்படும் இந்நிகழ்ச்சித் திட்டத்திற்கான நோக்குநிலை நிகழ்ச்சி  செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில், உலக உணவுத் திட்டத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி தயானந்த திட்டம் மற்றும் அதன் வகைகள், வரவு செலவு திட்டம், நிதி ஒதுக்கீடு, பயிற்சிகள் என்பன தொடர்பான நோக்குநிலையை முன்னளிக்கை ஊடாக தெளிவுபடுத்தினார்.
வழமையான பாடசாலை உணவு வழங்கல் திட்டங்களில் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைக்கு கொடுத்து, சந்தையில் இருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டுதான் பாடசாலைகளுக்கான உணவுகளை தயாரித்து விநியோகித்தார்கள்.
ஆனால் விவசாயத் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஊடாக இந்த புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி, விவசாயிகளும் பண்ணையாளர்களும் தமது வீட்டுத்தோட்டம், வீட்டுப் பண்ணைகளில் இருந்து பெறப்பட்ட காய்கறிகள், கோழி இறைச்சி மற்றும் முட்டை போன்ற உற்பத்திகளை நேரடியாக உணவு உற்பத்திக்கு பயன்படுத்தி அல்லது உணவுத் தயாரிப்பாளர்களுக்கு விநியோகித்து, அதனால் தயாரிக்கப்படும் உணவுகளை மாத்திரம் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்படும் உணவுகள் மண்முனை மேற்கு கல்வி வலையப் பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள திட்டத்தின் ஆரம்ப கட்டமாக மண்முனை மேற்கு, மண்முனை தென் எருவில்பற்று மற்றும் ஏறாவூர் பற்று ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 27 பயனாளிகள் விவசாயம் மற்றும் பண்ணைகள் தொழிலில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
உலக உணவுத் திட்டத்தின் அனுசரணையில் நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு இத்திட்டத்தினால் வீட்டுத்தோட்ட விவசாயிகள், வீட்டுப் பண்ணையாளர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்வாதாரமும் போஷாக்கு மட்டமும் உயர்த்தப்படுவதற்கு எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் ஆர்.எம். பி. எஸ்.ரத்நாயக்க, பிரதித்திட்டமிடல் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜதீஸ் குமார், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல், வலயக்கல்வி, பிராந்திய சுகாதார சேவைகள், விவசாயத் திணைக்களம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் ஆகியவற்றின் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.