பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சி.சி.ரி.வி. கெமரா பொருத்தப்பட வேண்டும்

 

 


 

பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சி.சி.ரி.வி. கெமரா அமைப்புகளை பொருத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாடசாலைகளிலும், ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களிலும் சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் சம்பவங்கள் அடிக்கடி பதிவாகி வருகின்றன. குருநாகல் பிரதேசத்தில் பஸ் சாரதி மற்றும் நடத்துனரின் உதவியுடன் பாடசாலை மாணவி ஒருவர் பயணிகள் பேருந்தில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம்   இடம்பெற்றுள்ளது.

 பாடசாலைகள் மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களில் சிறுவர்கள் அடிக்கடி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்ற சம்பவங்கள் அரசாங்கத்தை பெரிதும் கவலையடையச் செய்யும் விடயமாகும். “இதுபோன்ற சம்பவங்கள் ஒவ்வொரு பாடசாலையிலும் நடக்கும் என்று நான் கூறவில்லை, ஆனால் பாடசாலைகளில் சில ஆசிரியர்களால் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படும் சம்பவங்கள் பல நடந்துள்ளன. மேலும், பொது போக்குவரத்து வாகனங்களில் குழந்தைகளும் பெண்களும் அடிக்கடி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகின்றனர்.

இதுபோன்ற பெரும்பாலான சம்பவங்களை உறுதிப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாதது ஒரு  பிரச்சினை , போதுமான ஆதாரங்கள் இல்லாததால் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிப்பது இதுபோன்ற குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான அநீதி என்று அவர் குறிப்பிட்டார்.

“ குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சிசிடிவி கமரா அமைப்புகளை பொருத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கிறேன். சில கட்சிகள் இந்த நடவடிக்கையை எதிர்க்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் பாடசாலைகள் இரகசியமாக இருக்க வேண்டிய இடங்கள் அல்ல, எனவே அவற்றில் கெமராக்கள் பொருத்துவதன் மூலம் யாருக்கும் அநீதி இல்லை, ”என்று அவர் தெரிவித்துள்ளார்.