அருவி பெண்கள் வலயமைப்பினால் 16 நாள் செயல் திட்ட நிகழ்வுகள்!!


பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் பல்வேறு வினைத்திறன் மிக்க செயல்பாடுகள் அரச,அரசு சார்பற்ற நிறுவனங்களினால் நாடளாவிய ரீதியில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதற்கு அமைவாக சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை தின ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் "பெண் சுயதொழில் முயற்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரம்பரிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்தி நடவடிக்கைகளை காட்சிப்படுத்தும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட கண்காட்சியும், விற்பனையும் நடை பெற்றதுடன் பெற்றோர்களை இழந்த நிலையில் கல்வி கற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்,சாதணைப் பெண்கள் கௌரவிப்பு என பல்வேறு கலை கலாசார விஷேட நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின்  பணிப்பாளர் சட்டத்தரணி திருமதி மயூரி ஜனன் தலைமையில் கிரான் கருணா ஜக்கிய விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன், செங்கலடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர்களான  கோ.தனபாலசுந்தரம், எஸ்.ராஜ்பாவு உள்ளிட்ட  சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி, கிழக்கு பல்கலைக் கழக விரிவுரையாளர் வி.வசந்தா ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது  தெரிவு செய்யப்பட்ட மாவட்டத்தின் 09 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் ஸ்தாபிக்கப்பட்ட பிரதேச  சிவில் சமூக மட்ட குழுக்களிடையே பலதரப்பட்ட இனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் சகவாழ்வினை மேம்படுத்து வகையில் "சமாதானத்தை மேலொங்க செய்யும்  ஒற்றுமை தீப்பந்தம்" ஏற்றப்பட்டு ஒவ்வொரு குழு அங்கத்தவர்களிடையே கைமாறப்பட்டு அதிதிகளின் பங்கு பற்றுதலுடன் பொதுத்தீபம் ஏற்றப்பட்டது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்கும் 16 நாள் செயல் திட்ட நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை 16 நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.