(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்டக் கலை இலக்கிய விழா புதன்கிழமை (06) மண்முனை வடக்குப் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ் பிரதம அதிதியாகவும், மகரகம தேசிய கல்வி நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் முருகு தயாநிதி சிறப்பு அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் ஆரம்ப நிகழ்வு மங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் வழங்கிய வரவேற்பு நடனம் அரங்கேறியது.
இதன்போது மாவட்ட இலக்கியப் போட்டித் தொடர் நிகழ்ச்சியில் முதலிடங்கள் பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட எழுத்தாளர் சங்க உறுப்பினர் திருமதி ரதி தனஞ்சயன் எழுதிய "வாழ்தல் இனிது" சிறுகதை தொகுப்பு வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நூல் நயவுரையினை மாவட்ட எழுத்தாளர் சங்க ஆலோசகர் ஜனாப் ஜிஃப்றி ஹசனும், ஏற்புரையினை நூலாசிரியை திருமதி ரதி தனஞ்சயனும் நிகழ்த்தினர்.
நிகழ்வின் இறுதியில் மட்டக்களப்பு மாவட்ட கலாசார அலுவல்கள் உத்தியோகத்தர் ஜனாப் எம்.ஏ.சி.ஜெய்னுலாப்தீன் நன்றியுரையாற்றினார்.