(கல்லடி செய்தியாளர்)
ஈழத்தமிழ் இலக்கிய உலகு இன்னும் ஒரு படைப்பாளியை- விமர்சகரை- ஆய்வாளரை- தகமைசார் பேராசிரியரை இழந்து நிற்கின்றது. இந்நிலையில் அன்னார் விட்டுச் சென்ற பணியைத் தொட்டுத் துலங்க வைப்பதே அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் செய்யும் பிரார்த்தனையாகும் என பேராசிரியர் செ.யோகராசாவின் மறைவு குறித்து மட்டக்களப்பு கல்லடியிலிருந்ந்து வெளிவரும் "தென்றல்" சஞ்சிகையின் ஆசிரியர் க.கிருபாகரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
பேராசிரியர் அமரர் செ.யோகராசா அனைவராலும் அறியபப்பட்ட பன்முக ஆளுமை கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர். பல்கலைக்கழகப் பேராசிரியரியராக இருந்த போதிலும், ஈழத்தின் கலை, இலக்கியப் பரப்பில் அகலக்கால் விரித்து இலங்கையில் மட்டுமன்றி, கடல் கடந்து பல நாடுகளிலும் தமிழின் சிறப்பை- பெருமையை வெளிக்கொணர்ந்தவர்.
இலங்கையிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் ஈழத்திலிருந்து வெளிவரும் "தென்றல்" சஞ்சிகையில் பல்வேறு ஆக்கங்களை இலக்கியம் சார்ந்து எழுதினார்.
அந்தவகையில் மாணவர்களுக்காக "மாணவர்களே சிறுகதை எழுதுவோம் வாருங்கள்?" தொடர் உட்பட பல்வேறு இலக்கியக் கட்டுரைகளை தென்றலுக்கு வழங்கி தென்றல் சிறந்த சஞ்சிகையாக விருது பெற வழிசமைத்தார்.
இவ்வாறாக ஈழத்தில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த தேசங்களிலும் தனது எழுத்தாற்றல் மற்றும் பேச்சாற்றலால் என்றுமே மறக்க முடியாத பெரும் விருட்சமாகத் திகழும் அமரர் பேராசிரியர் செ.யோகராசாவுக்கு "தென்றல்" தலை சாய்த்துத் தனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறது என அவ் அஞ்சலிச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.