மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அதிக இடங்களில் முன்னிலையுடன் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சத்தீஸ்கரிலும் பாஜக முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் கடந்த ஓக்டோபர் 9-ம் திகதி அறிவித்தது. 5 மாநிலங்களிலும் நவம்பர் 7 முதல் 30-ம் திகதி வரை வாக்குப் பதிவு நடைபெறும் என்றும் டிசெம்பர் 3-ம் திகதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்தது.
இதன்படி, சத்தீஸ்கரில் நவ.7, 17 ஆகிய திகதிகளிலும், மிசோரமில் நவ.7, மத்திய பிரதேசத்தில் நவ.17, ராஜஸ்தானில் நவ.25, தெலங்கானாவில் நவ.30 ஆகிய திகதிகளில் தேர்தல் நடைபெற்றது.