வரதன்
மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், மாவட்ட மட்ட சமய சமூக அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் மாவட்ட பொங்கல் விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் (30) திகதி மிகச்சிறப்பாக இடம் பெற்றது.
தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தைப்பொங்கல் நிகழ்வானது மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி புதிர் எடுத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஶ்ரீகாந்த், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எம்.பஷீர், மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை மதிவண்ணன், பிரதேச செயலாளர்கள், உதவி பிர தேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட மட்ட சமய சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் 14 பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் 14 வகையான பொங்கல் பானைகள் பொங்கப்பட்டு, பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.
இதன் போது மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் மாணவர்களின் கண்கவர் கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கதிரவனின் 125வது சிறப்பு பட்டிமன்றம் என்பன அரங்கேற்றப்பட்டதுடன், நிகழ்வுகளை அரங்கேற்றிய மாணவர்கள் உள்ளிட்ட கதிரவன் பட்டிமன்ற குழுவினருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.