மட்டக்களப்பு வெருகல் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியது

 


 மகாவலி கங்கை கிளை ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் மாவிலாறு மற்றும் வெருகல் கங்கை ஆகியவற்றினூடாக மட்டக்களப்பு திருகோணமலை பிரதான நெடுஞ்சாலையை
ஊடறுத்துப் பாய்வதால் அங்கு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் வெருகலம்பதி ஆலயம் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளதனால், வழிபாடுகள் தடைப்பட்டுள்ளன.
வெள்ளநீர் பரவிச் செல்வதால் வீதியூடாக சிறிய ரக வாகனங்கள் பயணிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் ஊடறுக்கும் பிரதான வீதியின் இருமருங்கிலும், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்களும், வீதிப்போக்குவரத்துப் பொலிசாரும் வாகனங்களை பாதுகாப்பாகச் செல்லுமாறு
வழிகாட்டி வருகின்றனர்.
இதேவேளை, வெள்ளம் பரவியுள்ளதன் காரணமாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாவடிச்சேனை, வட்டவான், சேனையூர் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள 132 குடும்பங்களைச்
சேர்ந்த, சுமார் 660ற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து மாவடிச்சேனை பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.