(கல்லடி செய்தியாளர்)
"வழிந்தோடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் ஆங்கிலப் புதுவருடக் கொண்டாட்டம் நேற்று திங்கட்கிழமை (01) இடம்பெற்றது.
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ச.ஜெயராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திருமதி ஜே.ஜே.முரளீதரன் பிரதம அதிதியாகவும், மண்முனைப் பற்றுப் பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் சிறப்பு அதிதியாகவும், ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளரும், புதிய சங்கமம் அமைப்பின் தலைவருமான க.திருநாவுக்கரசு, மட்டக்களப்பு மேல்வருவத்தூர் ஆதி பராசக்தி கரோ மன்ற மாவட்ட இணைப்பாளர் க.துரைராஜா மற்றும் மயிலம்பாவெளி அகிம்சா சமூக நிறுவனத் தலைவர் விநாயகமூர்த்தி விசயராஜா ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் வரவேற்பு நடனம், ஆங்கிலப் பாடல், சிங்களப் பாடல், தமிழ் நாடகம், ஆங்கில நாடகம் போன்றன அரங்கேறின.
இதன்போது க.பொ.த சாதாரணதரத்தில் 9 "ஏ" சித்தி பெற்ற மாணர்களைப் பாராட்டுதல், 2024 ஆம் ஆண்டிற்கான அதிர்ஷ்டம் பகிர்தல், பரிசளிப்பு நிகழ்வு மற்றும் புதுவருடக் கைவிஷேடம் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.