பரீட்சை நிலையங்களில் விசேட நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை

 




































 

 எம்.எஸ்.எம் றசீன்
ஏறாவூர் பிரதேசத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் பரீட்சாத்திகள் மற்றும் உத்தியோகத்தர்கள் நன்மை கருதி நுளம்பு ஒழிப்பு புகைவிசிறும் நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இணைந்து நுளம்பு ஒழிப்பு புகைவிசுறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏறாவூர் பிரதேசத்தில் அண்மையில் பெய்த அடைமழை காரணமாக பாடசாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து மட்டக்களப்பு கல்வி வலய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக குடியிருப்பு கலைமகள் வித்தியாலய வளாகத்தில் தேங்கியிருந்த வெள்ள நீர் நகரசபை ஊழியர்களினால் பெக்கோ இயந்திரம் மூலம் வழிந்தோடச் செய்யப்பட்டது.

ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்.எச்.எம் ஹமீம், ஏறாவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சாபிறா வஸீம், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.எச்.எம் பழீல், மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர் எம். பஸ்மீர் உட்பட அதிகாரிகளும்  இதன் போது சமூகமளித்திருந்தனர்.

ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை, முனீறா பாலிகா மகா வித்தியாலயம், றகுமானியா மகா வித்தியாலயம், மற்றும் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம்  ஆகிய பரீட்சை நிலையங்களில் நுளம்பு ஒழிப்பு புகை விசிறும் பணிகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.