மட்டக்களப்பு மாவட்டத்தின் 2024ம் ஆண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்







மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திர காந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்  13 திகதி இடம்பெற்றது.  ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுணர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் மற்றும் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா மற்றும் மாவட்ட பாராளுமண்ற உறுப்பினர்களான இரா சாணக்கியன், அலிசாஹிர் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 9 ஆயிரத்தி
953.11 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1162 அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதுடன், இவ்வாண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து 287 மில்லியன் செலவில் நடைமுறைப் படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது.மேலும் கரையோரம் மற்றும் வாவியினை அண்டிய பகுதிகளில் கண்டல் தாவரங்களை நடுதல், மட்டக்களப்பு வாவியில் மிதக்கும் உலாலாசப் படகு சேவையினை ஆரம்பித்தல், வவுணதீவுப் பிரதேசத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டத்தினை ஆரம்பித்தல், புளுக்குணாவ குளத்தில் மீன்குஞ்சு வளர்ப்பினை ஆரம்பித்தல், மற்றும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தினை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றிற்க்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட செயலக உயரதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்கள், அதிகாரிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதுதவிர தனியார் கல்வி நிறுவனங்களால் நடாத்தப்படும் மேலதிக வகுப்புகளில் தரம் 10 தொடக்கம் க.பொ.த உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து வகுப்புகளையும் ஞாயிற்றுக் கிழமைகளில் தடை செய்வது தொடர்பான விசேட கூட்டம் ஒன்றை நடாத்தவும் தீர்மானிக்கப்பட்டதுடன் இம்மாவட்டத்தில் சட்டவிரோத மது உற்பத்தி மற்றும் மதுவிற்பனை தொடர்பாக கலால் திணைக்களம், பொலிசாருடன் இணைந்து உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.
விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்களுக்கான இழப்பீடுகளை

மீள்பரிசீலனை செய்து அதற்கான இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுக்கவும், பொதுமக்கள் மின்சாரக்கட்டணம் செலுத்த தாமதமாவதால் ஏற்படும் மிண்துண்டிப்புச் சலுகைக் காலத்தினை நீடிப்பது தொடர்பாக மின்சக்தி எரிசக்தி அமைச்சருக்கு கோரிக்கை விடுப்பதெனவும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் விரிவாக ஆராயப்பட்டதுடன் அவற்றில் பிரதேச மட்டத்தில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இங்கு ஆராயப்பட்டது. மேலும் எதிர்க்கட்சிப் பாராளுமண்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் சார்பாக முன்வைத்த பல விடயங்கள் கவனத்திற்கொள்ளப்பட்டதுடன் இவற்றில் மாவட்ட மட்டத்தில் தீர்க்கப்படவேண்டிய விடயங்களுக்கான தீர்வுகள் எட்டப்பட்டதுடன் தேசிய மட்டத்தில் பேசப்படவேண்டிய விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டன.