கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

 


 

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், யாழ்.மாவட்ட செயலாளர் பின்வரும் அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளார். 

இதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி காலை 5 மணி தொடக்கம் மு.ப 10 மணி வரை அரச பேரூந்துகள் மற்றும் தனியார் பேரூந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிக்கட்டுவான் வரை சேவையில் ஈடுபடும்.

கச்சதீவுக்கான படகுச்சேவையானது குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து 23ஆம் திகதி காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை சேவையில் ஈடுபடுத்தப்படும்.

குறிக்கட்டுவான், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய இறங்குதுறைகளில் இருந்து, பயணிக்கும் ஒரு நபருக்கான படகிற்குரிய ஒரு வழிப் பயணக் கட்டணம்1500 ரூபாய் ஆகும்.

வெளி மாவட்டங்களிலிருந்து தமது சொந்தப்படகுகளில் திருவிழாவிற்கு செல்வோர் தமது வசிப்பிடங்களிற்கு அருகிலுள்ள கடற்படை முகாம்களில் தொடர்புகொண்டு உரிய கடற்பயணப் பாதுகாப்பு அனுமதியினை பெற்றுக்கொள்வதுடன் படகுகளில் பயணம் செய்பவர்கள் தனித்தனிப் படகாக பயணம் செய்யாது குழுவாக இணைந்து பாதுகாப்பான முறையில் பயணிப்பதுடன் 23 ம் திகதி பிற்பகல் 6 மணிக்கு முன்னதாக கச்சதீவை வந்தடைவதற்கேற்றவாறு தங்களது பயணங்களை
ஆரம்பிக்கவேண்டும்.

கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் யாத்திரிகர்கள் தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் ஏற்பாடுகளுடன் வருகைதருதல் வேண்டும்.

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயமானது யாத்திரிகர்களின் புனித தலமாகவுள்ளதால் மது பாவனைப்பொருட்கள் கொண்டு செல்லுதல் மற்றும் பாவித்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலளார் அறிவித்துள்ளார்.