கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மூன்றாம் வருட கட்புலமும், தொழில்நுட்பமும் பிரிவில் கல்வி பயிலும் மாணவி டிலோச்சினி ரவிச்சந்திரனின் காட்டு விலங்குகள் ஒளிப்படக் கண்காட்சி வியாழக்கிழமை (08) கற்கைகள் நிறுவகத்தில் ஆரம்பமானது.
இக்கண்காட்சி மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடியினால் தொடக்கி வைக்கப்பட்டது.
கட்புலமும் தொழில்நுட்பமும் கலைப் பிரிவில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவி டிலோச்சினி தனது தனிக் கண்காட்சியாக இதனை ஒழுங்குபடுத்தியிருந்தார்.
பல்வேறு வகையான காட்டுவிலங்குகள், அவற்றின் வாழ்வியல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களை வெளிக்காட்டும் வகையிலான ஒளிப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிருந்தன.
இதற்காக பொத்துவில், குமண, ஹபரண மற்றும் மன்னார் ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று அங்குள்ள காட்டு விலங்குகளை தான் பதிவு செய்திருந்ததாக இதன்போது அவர் தெரிவித்தார்.
சிரேஸ்ட விரிவுரையாளர் சு.சிவரெத்தினம், கட்புலமும் தொழில்நுட்பமும் கலைகள் துறையின் தலைவர் ரமேஸ் பிரகாஸ், கண்காட்சியின் ஒழுங்கமைப்பாளர் கோகுலரமணன் மற்றும் விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் இக்கண்காட்சியில் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சியானது 2024-02 21 ஆம் திகதி வரைக்கும் காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.