பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் அரசியலமைப்புக்கு முற்றிலும் முரணாக இருப்பதால்,அதனை சட்டமாக்குவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு, சர்வசன வாக்கெடுப்பும் அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம், உயர்நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(30) வாதிட்டார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை (Anti Terrorism Bill)கேள்விக்குட்படுத்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தாக்கல் செய்திருந்த SD.SC.No.27.24 இலக்க சிறப்பு நிர்ணய மனு(Special Determination Application) அன்றைய தினம் ,உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சட்ட முதுமாணி ரவூப் ஹக்கீம் தாமாகவே வாதங்களை முன் வைத்தார் .
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் ,நீதியரசர்களான விஜித் மலல்கொட,ஏ.எச்.எம்.டீ.நவாஸ்,ஷிரான் குணரட்ண,அருண ஒபயசோசேகர ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வெவ்வேறு 36 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.