(பழுவூரான்)
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் நடாத்திய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை (10) கற்கைகள் நிறுவக வளாகத்தில் இடம்பெற்றது.
நிறுவனப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கெனடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு அதிதிகளால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு, நிறுவகத்துக்கு முன்னால் உள்ள பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுவாமி விபுலானந்தரால் எமக்கு ஈர்ந்தளிக்கப்பட்ட "சகோட யாழ்" வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாணவர் குழுக்களினால் செய்யப்பட்ட பொங்கல் அதிதிகள் மற்றும் மாணவர்கள், ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இதன்போது மாணவர்களின் பாடல் மற்றும் நடனங்கள் அரங்கேறின.
இந்நிகழ்வில் எமது பாரம்பரிய விளையாட்டுக்களான நிலைதடுமாறல், முட்டி உடைத்தல், நீர் நிரப்பிய பலூன் உடைத்தல், தலையணைச் சமர், சாக்கோட்டம் சங்கீத கதிரை போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.