இலங்கையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி குறித்து ஹரிஹரன் தமது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா இலங்கையில் யாழ்ப்பனத்தில் உள்ள முற்றவெளி மைதானத்தில் நேற்று முன் தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நிலையில் நடிகை தமன்னா, கலா மாஸ்டர் போன்றவர்களும் ஒரு சில சின்னத்திரை பிரபலங்களும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் விஐபிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு இலவசமாக அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. என்ட்ரி இலவசம் என்பதால் இந்த விழாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வந்திருக்கிறார்கள்.
அப்போது விஐபிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பார்வையாளர்கள் செல்ல முயன்று இருக்கிறார்கள். இதனால் அவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் முயன்றதால் ரசிகர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது.
இந்த தள்ளுமுள்ளில் சிலருக்கு மூச்சு திணறல் கூட ஏற்பட்டு இருந்தது. அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறியதால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்த பிரபலங்களும் நிகழ்ச்சியையும் நடத்த முடியாமல் தவித்து இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி இருக்கின்றனர்.
இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஹரிஹரன் ‘மறக்க முடியாத நிகழ்ச்சியாக அமைத்த யாழ்ப்பாணத்து மக்களுக்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் இசையின் வலிமையை காட்டி இருக்கிறது. நாம் ஒன்றாக இந்த உறவை கொண்டாடுவோம். இந்த விழாவை ஒருங்கிணைத்த கலா மாஸ்ட்ருக்கும் இந்திரகுமாருக்கும் நன்றி. ஒவ்வொரு நொடியும் சிறப்பாக இருந்தது.” என்றார்.
இதையடுத்து, ஹரிஹரனின் இந்த பதிவில் பல யாழ்ப்பாணத்து ரசிகர்கள் நிகழ்ச்சியில் நடந்த சில சங்கடங்களுக்கு மன்னிப்பு கோரி வருகின்றனர். ஏற்கனவே இந்த விழா குறித்து பேசிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ‘நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் சரியாகத்தான் செய்திருந்தோம். ஆனால் 35 ஆயிரம் ரசிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரு லட்சம் ரசிகர்களுக்கு மேல் வந்துவிட்டார்கள்.
கூட்டம் உள்ளே நுழைந்த பிறகு தான் பிரச்சனை ஏற்பட்டது இதனால் 20 நிமிடங்கள் மட்டுமே நிகழ்ச்சி தடைபட்டது அதன் பின்னர் நிகழ்ச்சி நன்றாக தான் சென்றது. நிகழ்ச்சி பாதியில் நின்றது என்பது தவறான தகவல் என்று கூறியுள்ளனர். இப்படி ஒரு நிலையில் ஹரிஹரனின் இந்த பதிவும் வைரலாகி வருகிறது.