ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் தொடர்பில் சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய தெரிவித்தார்.
இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட தீவாக இருக்க முடியாதெனவும், நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின் வெளிநாட்டு தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதும், புதிய வெளிநாட்டு உறவுளை ஏற்படுத்தகொள்வதும் அவசியம் எனத் தெரிவித்த அவர், அதற்காக வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் முக்கியமானதாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
"ஜனாதிபதியின் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஆதாரமற்றவையாகும். இவ்வாறான சர்வதேச மாநாடுகளில் பங்கேற்பதால் எமக்கும் உலக நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை பலப்படுத்திக்கொள்வதோடு, புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் முடியும். அரசியல் தலைவர்கள் தனியார் துறையினருடன் கலந்துரையாடி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைந்து அபிவிருத்திச் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கான இயலுமையும் அதனால் கிடைக்கும்.
அதேபோல் அணிசேரா கொள்கையை மேலும் உறுதிபடுத்துவதாகவும் அந்த சுற்றுப்பயணம் அமைந்திருந்தது. யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் மோதல்கள் ஆசியாவின் மீது தாக்கம் செலுத்தாமல் இருப்பதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பிலும் பேசப்பட்டதோடு, அரச தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் பின்னர் உலகின் அமைதியை பேண முடியும்.
அதேபோல் பொருளாதார மற்றும் சமூக ரீதியில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் மேலும் கலந்துரையாடப்பட்டதோடு, இலங்கைக்கு வருகை தருமாறு மற்றைய நாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது." என்று தெரிவித்தார்.