14 வயதுடைய பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது

 


அநுராதபுரத்தில் உள்ள முடிதிருத்தும் நிலையம் ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தொடர்ச்சியாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் முடிதிருத்தும் நிலையத்தின் உரிமையாளரையும் மற்றுமொருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் அனுராதபுரம் பிரதான நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக சஞ்சீவ ஜயசூரிய முன்னிலையில் இன்று (18) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி,  பாதிக்கப்பட்ட சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட முடிதிருத்தும் நிலையத்திற்கு பின்னால் உள்ள அறையில் இந்த குற்றச்செயல் நடந்துள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரைத் தவிர, 11 சந்தேக நபர்களின் பெயர்களை சிறுமி பொலிஸாரிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர்களில் 70 வயதுடைய மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் தந்தையும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர்கள் 11 பேரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தரம் 09 இல் கல்வி கற்கும் பாதிக்கப்பட்ட சிறுமி தேசிய மட்டத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மிகவும் திறமையான சிறுமி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.