சிவ.சந்திரகாந்தனின் ஈஸ்டர் படுகொலை நூல் வெளியிட்டு விழா -2024.03.23









கிராமிய வீதிகள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட  ஒருங்கினைப்புக் குழு  தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் எழுதிய  ஈஸ்டர் படுகொலை இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் நூல் வெளியிட்டு விழா இன்று (23) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மங்கல விளக்கேற்றப்பட்டு சர்வமத தலைவர்களின் ஆசியுரை, அழகிய வரவேற்பு நடனம் என்பவற்றுடன்  நிகழ்வுகள் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, நூலாசிரியரினால் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

நூலின் முதல் பிரதிகள் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் உயிர்நீத்த உறவுகளிற்கு வழங்கி வைத்ததைத் தொடர்ந்து, சர்வமத தலைவர்களுக்கும் நூலின் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

சந்திரோதயம் கலை இலக்கியப் பெருமன்றத்தினால் வெளியிடப்பட்ட
இன - மத நல்லிணக்கம் அறிதலும் புரிதலும் எனும் கருப்பொருளை மையமாகக் கொண்ட எழுதப்பட்டுள்ள இப்புத்தகமானது நூலாசிரியரின் இரண்டாவது நூலாக திகழ்கின்றது.

கடந்த 2019 ஆண்டு இடம் பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பாக இராஜாங்க அமைச்சரினால்  அவதானிக்கப்பட்ட  விடயங்களின் தொகுப்பாக இந் நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வள்ளிபுரம் கணகசிங்கம், இராஜாங்க அமைச்சரின் தாயார் கமலா சிவநேசதுரை உள்ளிட்ட திணைக்கள தலைவர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இராஜாங்க அமைச்சர்  சிறைவாசம் அனுபவித்த போது அவரது முதல் நூலான வேட்கை எனும் நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.

அதே வேளை சிறந்த கல்விச் சமூகத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஆசியாவின் அதி நவீன தொழில் நுட்ப வசதிகளை கொண்ட பாரிய நூல் நிலையமொன்றினை இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் அமைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.