(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு மாவட்ட பண்பாட்டலுவலகமும் மட்டக்களப்பு பொதுநூலகமும் இணைந்து உலக கவிதைகள் தினத்தை முன்னிட்டு நடத்திய கவிக்கூடல் நிகழ்வு மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டக் கலாசார இணைப்பாளர் தங்கராசா மலர்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
தொடக்கவுரையையும் வரவேற்புரையையும் இணைத்ததாக மட்டக்களப்பு பொதுநூலக பிரதமநூலகர் த.சிவராணியும், தலைமையுரையை மாவட்டக் கலாசார இணைப்பாளர் த.மலர்ச்செல்வனும் நிகழ்த்தினர்.
இதன்போது யாப்புக் கவிஞர்களும் யாப்பை மீறிய கவிஞர்களும் தங்கள் கவிதையை வாசித்தனர்.
இதில் யாப்புக் கவிதைகளை பாவலர் சாந்தி முஹைதீன்,கவிஞர்களான வில்லூர்பாரதி,அருளானந்தம், கமலநாதன்,அரியநாயகம் ஆகியோர் சமர்ப்பித்தனர். அதன் பின் கவிஞர் செங்கதிரோனினால் அந்தக் கவிதைகள் பற்றி மதிப்பீட்டுரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் "கவிதையின் சமகால நிலை" பற்றி கவிஞர் ஜிஃப்ரிஹசனிலால் உரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வின் புதிய பரிணாமமாக யாப்பை மீறிய பெண் கவிஞர்களான கவிதாயிகளான மண்டூர் அசோகா,விஜயலட்சுமி சேகர்,கவிமகள் ஜெயவதி, ஆ.ஜதுசனா, விஜலட்சுமி இராமச்சந்திரா ஆகியோர் கவிதைகளை வாசித்தனர்.
இக்கவிதைகள் பற்றி கவிதாயினி சுதாகரியினால் மதிப்பீட்டுரை நிகழ்த்தப்பட்டது.
இதன் பின் கவிஞர்களான அ.ச. பாய்வா,த.மலர்ச்செல்வன் ஆகியோர் திருட்டை உட்பொருளாக வைத்து கவிதை பொழிந்தனர்.
இக்கவிதை பற்றி கவிஞர் ஜிஃப்ரிஹசனினால் சிறப்பான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
கவிதைகளை ஆராய்ந்து, புதிய பரிணாம நோக்கில் முன்னெடுத்துச் செல்வதை நோக்காகக் கொண்டு இக்கவிக்கூடல் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.