(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் எம்.பற்றிக் தலைமையில் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை (14) இடம்பெற்றது.
பாடசாலை மாணவர்களின் பாண்டு வாத்திய இசை முழங்க, அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து, இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வின் ஆன்மீக அதிதியாக தன்னாமுனை புனித ஜோசப் தேவாலயப் பங்குத் தந்தை வணபிதா அன்ரனி றோயல் பெர்ணாண்டோ, பிரதம அதிதியாக வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனும், கௌரவ அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய கல்வி அபிவிருத்திக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி தேவரஜனி உதயகுமாரும், சிறப்பு அதிதிகளாக ஏறாவூர்ப் பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரி.ராஜமோகன், மட்டக்களப்பு கல்வி வலய ஆலோசனை வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் கே.இரவீந்திரன் மற்றும் கல்லூரி பி.எஸ்.ஐ இணைப்பாளர் ஏ.ஜெயநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.
இதன் போது அதிதிகளுக்கு மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
போட்டியில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கும் இல்லங்களுக்கும் வெற்றிக் கிண்ணங்களும், சான்றிதழ்களும் பிரதம அதிதி உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் வருட இல்ல விளையாட்டுப் போட்டியில் 418 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை கிங்ஸ்லி இல்லமும், 417 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினை பேனி இல்லமும், 366 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினை அன்ரனி இல்லமும் பெற்றுக் கொண்டுள்ளது.
இதன்போது இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனால் தன்னாமுனை புனித ஜோசப் தேவாலயப் பாவனைக்கென குப்பைத் தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.