அலைபேசிகளை சார்ஜ் செய்வதற்கு அலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளன.
இருப்பினும் சில நேரங்களில் அலைபேசிகளை சார்ஜ் செய்யும் போது ஏற்படும் ஷார்ட் சர்க்யூட் காரணமாக அடிக்கடி அலைபேசிகள் வெடித்து சிதறும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகருக்கு அருகே, அலைபேசி வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள பல்லவபுரம் பகுதியில் சனிக்கிழமை இரவு (23) ஜானி என்ற கூலித்தொழிலாளி தனது வீட்டில் அலைபேசியை சார்ஜ் போட்டிருந்தார். அப்போது வீட்டில் சரிகா (10), நிகரிகா (8), சன்ஸ்கர் (6), களு (4) ஆகிய 4 குழந்தைகளும் மனைவி பபிதாவும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் திடீரென அலைபேசி வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
குறித்த தீ பரவலினால், படுகாயமடைந்த மனைவி உட்பட குழந்தைகள் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குழந்தைகள் நால்வரும் உயிரிழந்துள்ளதோடு மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கணவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது