ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியல்.

 


வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று  (09) உத்தரவிட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது  ஆலயத்திற்குள் நுழைந்த பொலிஸார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிஸார்  முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய  பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பில் சட்டத்தரணி தி.திருஅருள் கருத்து தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.