கல்லடி செய்தியாளர்)
இராமகிருஸ்ணமிஷனால் கல்லடிப் பாலத்தடியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பீடம் அடங்கலாக 25.05 அடி நீளமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை கொழும்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தாஜீ மகராஜினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) திரை நீக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமிஜீயினால் ஆரார்த்தி காட்டப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்களான திருமதி கலாமதி பத்மராஜா மற்றும் கணபதிப்பிள்ளை கருணாகரன் , முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மண்முனை- வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி, மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், கலை இலக்கிய வாதிகள், ஆன்மீகத் துறவிகள், இல்ல மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
இதன்போது சுவாமி விவேகானந்தரின் வேடம் தாங்கிய சிவானந்தா வித்தியாலய மாணவரொருவர் உரைநிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.