கல்லடி செய்தியாளர் & ஜெயராஜா
"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில்
உதவும் கரங்கள் நிறுவனம் நடத்திய
இந்தியா- தமிழ்நாடு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் சிறப்புப் பட்டிமன்றங்கள் நிகழ்த்திய கதிரவன் பட்டிமன்றப் பேரவைப் பேச்சாளர்களுக்கான
தாலாட்டும் பாராட்டும் நிகழ்வும், 134 ஆவது சிறப்புப் பட்டிமன்றமும் மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்றது.
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும், கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமாகிய ச. ஜெயராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, காணி, காணி அபிவிருத்தி, நீர் வழங்கல், மகளிர் விவகாரம் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மூ. கோபாலரத்தினமும்,
சிறப்பு அதிதிகளாக மன்முனைபற்றுக் கோட்டக்கல்வி அதிகாரி சி. தில்லைநாதன், மட்டக்களப்பு கல்வி வலய தொழில் வழிகாட்டலுக்கான உத்தியோகத்தர் அ.ஜெயநாதன் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் இ. சிவலிங்கம் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக காந்தி சேவா சங்கத் தலைவர் அரிமா அ.செல்வேந்திரன் , சிவ தொண்டர் திருக்கூடத் தலைவர் சிவ தொண்டன் க. கமல்ராஜ் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
நிகழ்வின் வரவேற்புரையினை ஏராவூர்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளரும், உதவும் கரங்கள் அமைப்பின் உப தலைவருமான த. ராஜமோகன் நிகழ்த்த, நன்றியுரையினை உதவும் கரங்கள் அமைப்பின் பொருளாளரும், தாய் சேய் நல சுகாதார வைத்திய அதிகாரியுமான வைத்தியர் க.கிரிசுதனும் நிகழ்த்தியிருந்தனர்.
நிகழ்வின் பிரதான அம்சமாக மட்டக்களப்பு கதிரவன் பட்டிமன்றப் பேரவையின் 134 வது சிறப்பு பட்டிமன்றம் இடம் பெற்றது.
மாணவர்களின் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்களிப்பு போதும்- போதாது எனும் தலைப்பில் இடம்பெற்ற பட்டிமன்றத்தில் பட்டிமன்றப் பேரவை தலைவர் கதிரவன் த. இன்பராசா தலைமை வகிக்க, போதும் எனும் அணியில் கவிஞர் அழகுதனு , கவிஞர் சோலையூரான் ஆகியோரும் போதாது எனும் அணியில் கவிஞர் அன்பழகன் குரூஜ், மட்டுநகர் சிவ வரதகரன் ஆகியோர் பங்குபற்றினர்.
பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு, நினைவுச் சின்னம் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன், பேரவைத் தலைவர் கதிரவன் த. இன்பராசாவின் கலை- இலக்கியம்- பண்பாடு மற்றும் சமூக முன்னேற்ற நற்பணிகளில் ஓயாது செயலாற்றும் நற்பணியை பாராட்டி "சொல்லருவி" எனும் சிறப்புப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காந்தி சேவா சங்கத் தலைவர் கலாநிதி அரிமா அ. செல்வேந்திரன் உதவும் கரங்கள் நிறுவனத் தலைவர் ச. ஜெயராஜாவின் ஓய்வில்லாத சமூகப்பணியைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.