மட்டக்களப்பில் முதல் முறையாக ஒரே நாளில் இரண்டு இலக்கிய நிகழ்வுகள்!









































(கல்லடி செய்தியாளர்)

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய
பெளர்ணமி கலை இலக்கிய நிகழ்வு-52 மற்றும் 53 ஆவது நிகழ்வுகள் சனிக்கிழமை (02) காலை மற்றும் மாலை நிகழ்வுகளாக மட்டக்களப்பு பொதுநூலக கூடத்தில் இடம்பெற்றது.

இதன் அடிப்படையில் கனடா, இந்தியா மற்றும்  இலங்கை என மூன்று இடங்களில் ஒரே நேரத்தில் அச்சாகும்  "தாய்வீடு" இதழின்
அறிமுகமும் கருத்துப் பகிர்வும் காலை நிகழ்வாக கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.சந்திரசேகரம் தலைமையில் அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக கனடா "தாய்வீடு" இதழ் ஆலோசகர் பொன்னையா விவேகானந்தன் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வரவேற்புரையையும் தொடக்கவுரையையும் இணைத்ததாக மகுடம் வி.மைக்கல்கொலின் உரை நிகழ்த்தினார்.

இதழ் தொடர்பான கருத்துப் பகிர்வினை கவிஞர் ஜிஃப்ரி ஹாசனும், எழுத்தாளர் ச.மணிசேகரனும் நிகழ்த்தினர்.

நிகழ்வின் இறுதியாக ஊடகவியலாளர் தேவ.அதிரன் நன்றியுரையாற்றினார்.

மாலை நிகழ்வாக யோர்ச் அருளானந்தத்தின் "மண்ணும் மனிதர்களும்" சிறுகதைத்  தொகுப்பு நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மை விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா.செல்வராசாவும், சிறப்பு விருந்தினராக கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸூம் கலந்து சிறப்பித்தனர்.

தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் மங்கல விளக்கேற்றலுடன் இந்நூல் அரங்கேற்றம் ஆரம்பமானது.

இதன்போது வரவேற்புரையையும், தொடக்கவுரையையும் இணைத்ததாக மகுடம் வி.மைக்கல் கொலினும், நூல் அறிமுகவுரையினை கதிரவன் த.இன்பராசாவும்  நிகழ்த்தினர்.

இந்நிகழ்வை தனது இனிய வசீகரக் குரலால் புதுமெருகேற்றலுடன் கவிஞர் ஜி.எழில்வண்ணன் தொகுத்து வழங்கியதுடன், நன்றியுரையையும்  ஆற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ்விரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டோருக்கு "தாய்வீடு" இதழ் மற்றும் "மண்ணும் மனிதர்களும்" சிறுகதைத் தொகுப்பு ஆகியன இலவசமாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.