இணையம் ஊடாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

 

இணையம் ஊடாக பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கும் பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவியை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

இணையம் ஊடாக தனிநபர்களிடமிருந்து பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பவர்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உதவி தேவைப்படுவோர் dir.ccid@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு செய்யலாம் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

24 மணி நேரமும் செயல்படும் 109 என்ற சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அவசர அழைப்பு மூலமாகவும் முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் என்று அவர் மேலும் கூறினார். 

ஹிக்கடுவையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் பேஸ்புக் ஊடாக யுவதியொருவரை துன்புறுத்தியதற்காக கைது செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த உதவி இலக்கங்களை வெளிப்படுத்தினார்.

குறித்த இளைஞன், தன்னைத் திருமணம் செய்யுமாறு யுவதியை பலமுறை வற்புறுத்தியுள்ளார். பின்னர் அப்பெண்ணின் புகைப்படங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகக் கூறி அவருக்கு ஒரு இணைப்பை அனுப்பியுள்ளார், இணைப்பை அப்பெண் தனது காதலனுக்கு அனுப்பி அதை சோதிக்குமாறு கோரியுள்ளார். 

அதன் மூலம் சந்தேக நபர் குறித்த தம்பதியினருக்கு இடையிலான ஒன்லைன் உரையாடல்கள் மற்றும் படங்களை ஊடுருவி பெற்றுள்ளார்.

அவற்றை அந்தப் பெண்ணின் போலியான படங்களை உருவாக்க பயன்படுத்தி அவளை பாலியல் தேவைகளுக்காக அச்சுறுத்தியுள்ளார். 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அப்பெண் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் பிலியந்தலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.