யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ்.பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ்வாண்டு கிருஷ்ணராஜா செல்விக்கு வழங்கப்படுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா, வியாழக்கிழமை (14) ஆரம்பமானது, வௌ்ளிக்கிழமை (15) மற்றும் சனிக்கிழமை (6) ஆகிய தினங்களிலும் நடைபெறும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகப் படித்துக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி, ஊரடங்கு வேளையில் அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ்.இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற
நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப்
பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ்.பல்கலைகழகத்திடம் நிதி
கையளிக்கப்பட்டது. இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்
பதக்கம் கடந்த ஐந்து ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது.