(கல்லடி செய்தியாளர்& பிரதான செய்தியாளர் )
தமிழ் மக்களின் விடிவுக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அன்னை பூபதியின் 36 ஆவது
நினைவு தினததினை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) நினைவஞ்சலி உணர்வுபூர்வமாகச் செலுத்தப்பட்டது.
இதன் ஆரம்ப நிகழ்வாக திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலிருந்து அன்னை பூபதியின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தி ஊர்வலம் இடம்பெற்றது.
குறித்த ஊர்வலம் புதுமுகத்துவாரம் ஊடாக நாவலடியிலுள்ள அன்னையின் நினைவிடத்தைச் சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து அன்னை பூபதியின் இரு மகள்களும் இணைந்து தீபச்சுடரை ஏற்றினர். அத்தோடு அன்னையின் சமாதிக்கு முக்கிய பிரமுகர்கள் மலர்மாலை அணிவித்தும்,மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,எஸ்.ஸ்ரீநேசன்,மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர் தியாகராஜா சரவணபவன்,முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள்,அதிபர் தர்மலிங்கம் சுரேஸ்,சமூக செயற்பாட்டாளர் எஸ்.லவக்குமார்,வணபிதா ஜோசப்மேரி அடிகளார்,தவத்திரு வேலன் சுவாமிகள்,சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள்,அன்னை பூபதியின் குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதிபர் தர்மலிங்கம் சுரேஸால் பிரகடனம் வாசிக்கப்பட்டது.
அன்னை பூபதி மட்டக்களப்பில், இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக நீரை மட்டுமே அருந்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த பெண்மணி ஆவார்.
இவரது உண்ணாவிரதப் போராட்டம் 1988 மார்ச் 19ஆம் திகதி தொடங்கி சரியாக ஒரு மாதத்தின் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவாறே ஏப்ரல் 19ஆம் திகதி உயிர் துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.