பில்லி ,சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் கடந்த (14) உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதான கோவிந்தசாமி கல்பனா என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர்.
அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற , குணமாக்கல் வழிபாடுகள் , பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும் , வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து , ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.