கிராமிய பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.



 








மட்டக்களப்பு  மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி  இராஜாங்க  அமைச்சரும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்  07.04.202 இடம்பெற்றது.

 
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்களும் இதன்போது கலந்து கொண்டிருந்தார்.

 மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவில் உள்ள களுதாவளை மகா வித்தியாலயம், தேற்றாத்தீவு மகா வித்தியாலயம், குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயம், ஆகிய பாடசாலைகளின் மாணவர்களின் விளையாட்டு திறனை அபிவிருத்தி செய்வதற்கு இவ்உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 
இப்பிரதேச  பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் பல வருடங்களாக  தமது திறமைகளை வெளிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

இதன்போது தடை தாண்டல் ஓட்டத்திற்கான உபகரணங்கள், பரிதி வட்டம், ஈட்டிகள், கூடைப்பந்து, கால்பந்து போன்ற விளையாட்டு  உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 

உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன், பட்டிருப்பு கல்வி வலய உடற்கல்விப் பிரிவுக்குரிய உதவிக் கல்வி பணிப்பாளர் த.இதயகுமார், பாடசாலைகளின் அதிபர்கள், இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் த.தஜிவரன், பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.