இந்தியாவிலிருந்து (India) இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக அந்நாட்டின் பிரதிநிதி ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரிய வெங்காயம் (Big onion) ஏற்றுமதிக்கான தடையை இந்தியா மேலும் நீட்டித்துள்ளதன் காரணமாக நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள பெரிய வெங்காயப் பிரச்சினைக்கு தீர்வாக குறிப்பிட்ட அளவு பெரிய வெங்காயத்தை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்காக அரசாங்கம் பல தடவைகள் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையிலேயே இலங்கைக்கு பெரிய வெங்காயத்தினை இறக்குமதி செய்வது குறித்து ஆலோசிக்க இந்தியாவிலிருந்து பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தான் இலங்கைக்கு பெரிய வெங்காய ஏற்றுமதியை நிறுத்தியுள்ள நிலையில் தற்பொழுது துருக்கி மற்றும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் சந்தையில் ஏராளமாக காணப்படுகிறது.
அதன்படி துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 420 ரூபாவிற்கும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 320 முதல் 350 ரூபா வரையிலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.