ஜனாதிபதியிடமிருந்து கல்லடி மற்றும் காத்தான்குடி சிறுவர் இல்லங்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு!























(கல்லடி செய்தியாளர் &  பிரதான செய்தியாளர் )
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் மற்றும்  மட்டக்களப்பு  கல்லடி ஸ்ரீ  இராமகிருஷ்ணமிஷன் பெண்கள் சிறுவர் இல்லத்திற்கும் இன்று சனிக்கிழமை (13) இனிப்புப் பண்டங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்களும் பரிசில்களும் வழங்கி வைக்கும் நிகழ்ச்சித் திட்டம் இன்று இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் பராமரிக்கப்படும் 54 சிறுவர்கள் மற்றும் கல்லடி ஸ்ரீ இராம கிருஸ்ணமிஷன் பெண்கள் சிறுவர் இல்லத்தினால் பராமரிக்கப்படும் 62 சிறுமிகளுக்குமான பரிசில்கள் மற்றும் இனிப்புப் பண்டங்கள் ஜனாதிபதி படைப்பிரிவின் ஆலோசனைக்கமைய மட்டக்களப்பு குருக்கள்மடம் 11 ஆம் படைப்பிரிவின் ஏற்பாட்டில்  மேஜர் அமில டயஸ் தலைமையிலான குழுவினரால் வழங்கி வைக்கப்பட்டது.

காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில், அதன் தலைவர் ஐ.எல்.எம். றுவைத், செயலாளர் மௌலவி எம்.எச்.எம். புஹாரி பலாஹி உள்ளிட்ட நிருவாகிகள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

அதேவேளை கல்லடி ஸ்ரீ இராமகிருஸ்ணமிஷன் பெண்கள் சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அதன் மேலாளர் சுவாமி நீல மாதவானந்தா ஜீ மகராஜ் மற்றும் அதன் நிறுவாகியும் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தருமாகிய கே. மதிவண்ணன் உள்ளிட்ட நிருவாகிகள், ஆசிரியர்கள், மாணவிகள் எனப் பலரர் பிரசன்னமாயிருந்தனர்.

இவ்விரு நிலையங்களினதும் சிறுவர்களால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன் ஸ்ரீ இராமகிருஸ்ண மிஷன் பெண்கள் சிறுவர் இல்லத்தின் சிறுமிகள் சித்திரைப் புதுவருடத்தின் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில் விளையட்டுக்களில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிந்தது.