டெலிகொம் நிறுவனம் ஏலம் விடுவதற்காக போடப்பட்டிருந்த நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை வெட்டி விற்பனை செய்த 07பேர் கைது

 


வென்னப்புவ பகுதியில் நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை திருடி அதனை பழைய இரும்புக் கடையொன்றில் விற்பனை செய்துள்ளனர் எனும் குற்றச்சாட்டின் கீழ்  டெலிகோம் நிறுவனத்தில் பணியாற்றும் ஏழு தொழிநுட்ப பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வயர்களை சந்தேக நபர்கள் இவ்வாறு திருடி விற்பனை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ துனுவில பகுதியில் இருந்து கிரிமெட்டியான சந்தி வரையிலான 4 கிலோ மீற்றர் தூரத்திற்கு நிலத்தடி ஊடாக புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி இணைப்புக்களை இவ்வாறு வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடுநேரிய, மாரவில, தொடுவாவ, கொஸ்வத்த, ஆனமடுவ மற்றும் கொபேய்கேன் பகுதிகளைச் சேர்ந்த 38, 43, 37, 35, 51, 41 மற்றும் 56 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பிரதேசத்தில் டெலிகொம் நிறுவனம் ஏலம் விடுவதற்காக போடப்பட்டிருந்த நிலத்தடி தொலைபேசி இணைப்புகளை சிலர் வெட்டி அகற்றியதை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.