சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

 


 

 

































(கல்லடி செய்தியாளர் & பிரதான செய்தியாளர் )

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதி கோரிய போராட்டமும் மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலுள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில் இன்று வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.

மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

மட்டு.ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்திற்கு முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வீ.கே.ரவீந்திரன் ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்தனர்.

அத்தோடு நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள்,அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூக ஏற்பாட்டாளர்கள் அவரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதோடு,ஈகைச் சுடர்களையும் ஏற்றினர்.

அதனைத் தொடர்ந்து நினைவுத் தூபிக்கு முன்பாக இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியும் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் மற்றும் ஞா.ஸ்ரீநேசன்,முன்னாள் கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம்,முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன்,பிரதி முதல்வர் தி.சத்தியசீலன்,மட்டக்களப்பு மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் பொன்.உதயரூபன்,மாவட்ட ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த அரசியல் பிரமுகர்கள் அனைவரும் மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சமூகப் பற்றாளர் ஐயாத்துரை நடேசன் ஊடகப் பணியோடு, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில் பயணிக்க வேண்டுமென்பதில் உறுதியாகச் செயற்பட்டார்.

இந்நிலையில் 20 ஆண்டுகள் கடந்தும் அவருக்கான நீதி இதுவரை மாறி மாறி ஆட்சிபீடம் ஏறிய அரசுகளால் வழங்கப்படவில்லை. எனவேதான் சர்வதேச விசாரணைகளை வேண்டி நிற்கிறோம் என்றனர்.