சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் போது புதிதாக பணத்தை அச்சிட முடியாது என்று அறிவிக்கப்பட்டது - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

 


சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள இணக்கப்பாடுகளை பாதுகாப்பதற்கு ஒன்றிணையுங்கள்" என்று எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின கூட்டத்தின் போதே ஜனாதிபதி இந்த அழைப்பை விடுத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே  தின நிகழ்வு 'மீண்டும் வீழ்ச்சியடையாத கௌரவமான நாடு' எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்துடனான திட்டத்தின் போது புதிதாக பணத்தை அச்சிட முடியாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் அரச வங்கிகளில் கடன் வாங்கவும் முடியாதென அறிவிக்கப்பட்டது. அரசு வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் தெரிவித்தனர். ரூபாயை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கஷ்டமாக இருந்தாலும் அதற்கான முடிவுகளை எடுத்தோம். மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தியும் அப்போது என்ன சொன்னார்கள்? ஆனால் இன்று நாட்டின் நிலைமை என்ன? இன்று ரூபாயின் பெறுமதி பலப்படுத்தப்பட்டுள்ளது. டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி 280 ஆக உள்ளது. ரூபாய் பெறுமதி வலுவடைந்திருப்பதால் மக்கள் கையிலிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகரிக்கிறது.

தற்போது, பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகின்றனர். மேலும், கடந்த பெரும்போகத்தில் நல்ல விளைச்சல் கிடைத்தது. மேலும் தொழில்கள் மீண்டும் உயிர்பெறுகின்றன. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்கும் வகையில் பராட்டே சட்டத்தை ஒரு வருடத்திற்கு அமுல்படுத்தாதிருக்க நடவடிக்கை எடுத்தோம். மேற்படித் துறைகளை பாதுகாப்பதற்காக தனிப் பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்படவுள்ளது.

அதனால் மிகவும் சிரமப்பட்டே இன்றைய நிலைக்கு வந்துள்ளோம். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தினால் அந்த பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த நிலைமையை பாதுகாத்து முன்னேறிச் செல்வதா? அல்லது நாட்டை 2022 இல் இருந்த நிலைக்கு கொண்டுச் செல்வதா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட கட்சிகளும் இத்திட்டத்திற்கு எதிராக செயற்படக்கூடாதென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.