(கல்லடி செய்தியாளர்)
ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆலையடிவேம்பு கால்நடை பாற்பண்ணையாளர் விவசாயக் கூட்டுறவுச் சங்கம் (ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தொழிற்சங்கம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்திய தொழிலாளர் தினம் "உரிமைக்காய் உரக்கச் சொல்வோம்" எனும் தொனிப் பொருளில் ஆலையடிவேம்பு பாற்பண்ணையாளர் சங்க கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (01) இடம்பெற்றது.
பாற்பண்ணையாளர் சங்கத் தலைவர் எஸ்.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,ஆரம்பத்தில் ஒடுக்குமுறைகள் மற்றும் அடக்கு முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த தொழிலாளர் உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இதன்போது தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஈரோஸ் ஜனநாயக முன்னணியினால் பொதுப் பிரகடனம் வெளியிடப்பட்டது.
அப்பிரகடனத்தினை எஸ்.வசந்தன் வாசித்தார்.
அப்பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இலங்கையில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெக்கடியானது ஒட்டுமொத்தமான தொழிலாளர் வர்க்கத்தினரின் வாழ்வியலில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பொதுமக்களும்,தொழிலாளர்களும் சொல்லொண்ணாத துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.
கடந்தகால ஆட்சியாளர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரக் கொள்கை இலங்கை நாட்டை இயங்கு நிலையற்றதான நிலைக்குக் கொண்டு சென்று நிறுத்தி வைத்திருந்தது. எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் தஞ்சமடைந்த காரணத்தினால் இன்று தட்டுத் தடுமாறி இலங்கையின் பொருளாதாரம் நலிந்த நிலையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடையக் காரணமாக இருந்தவர்கள் தம்மால் முடியாது என ஆட்சியை விட்டுத் தப்பியோடினார்கள். இந்நிலையில் அவர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும்,மேம்பாட்டுக்கும் அயராது உழைக்கும் தொழிலாளர் வர்க்கம் எல்லா வகையிலும் பாதிக்கப்பட்டு வாழ வழியின்றி விரத்தியின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரதும் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காக இனம்,மொழி,மதம்,பிரதேசம்,கட்சி என்பவற்றைக் கடந்து "உழைக்கும் தொழிலாளர்" எனும் ஒரு கூடையின் கீழ் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படுவதுதான் தன்னிறைவை நோக்கிய பயணத்திற்கான பாதையாக அமையும் என்பதனை உறுதிபடக் கூறுகிறோம்- என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் ஈரோஸ் ஜனநாயக முன்னணி மாவட்டச் செயலாளரும்,மத்திய குழு உறுப்பினருமான எஸ்.வசந்தன்,சமூகப் பொருளாதார ஆய்வாளர் எஸ்.மாறன்,ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இராஜராஜேந்திரா உட்பட கட்சியின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.