விமர்சனம் செய்வது மிகவும் எளிதான விஷயம் . ஆனால் தீர்வை பெற்றுக்கொள்வது கடினமான காரியம் -ஜனாதிபதி

 


 

நாட்டின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்துள்ள நிலையில், மீண்டும் பழைமையான அரசியலில் ஈடுபடலாம் என எவரும் எண்ணிவிடக் கூடாது. முறையான திட்டத்தினூடாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நாணய நிதியம் இன்றி பணம் பெற வேறு வழியில்லை. எதையாவது பேசலாம். ஆனால் தீர்வு இல்லை. சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக சிலர் கூறுகின்றனர். கடைக்குச் சென்று இன்னும் ஒரு மாதம் கடன் தருமாறு முதலாளியிடம் கேட்பதைப் போன்று இவற்றைச் செய்ய முடியாது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் இதைப் பற்றி பேசுகிறார்கள். இரண்டு வருடங்கள் இதைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது.

எனவே, தவறான கருத்துக்களை வெளியிடாமல், இது குறித்து முறையான வேலைத்திட்டம் இருந்தால், அதை முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல் இந்தத் திட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 2020 இல் இதைப் பற்றி நாம் சொன்னபோது அனைவரும் அதனை நிராகரித்துவிட்டனர். அதனால்தான் இந்த நிலைக்கு வந்தோம். எனவே, சர்வதேச நாணய நிதியத்துடனான இந்த திட்டத்தை நாம் நிராகரித்தால், நாம் மேலும் படுகுழியில் விழ நேரிடும்.

எனவே பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான திட்டமொன்று இருக்க வேண்டும். அத்தகைய திட்டம் யாரிடமும் இல்லை என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டின் பொருளாதாரப் பரிமாற்றச் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விமர்சனம் செய்வது எளிது. ஆனால் தீர்வு வழங்குவது கடினமானது. எனவே குறை கூறாமல் தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.