சட்டமாதிபரின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

 


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் பேராயர் இல்லத்துடனான தொடரபாடல் குழுவில் சட்டமாதிபர் முக்கிய பங்கை வகிப்பதனால் அவரின் சேவை காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், “2019ஆம் ஆண்டில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இலங்கை ஆயர்கள் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த பேரவையின் தலைவர் வணக்கத்துக்குரிய ஹெரல்ட் என்டனி பெரேரா மற்றும் குருநாகல் ஆயர் ஆகியோருடன் தொடர்புகொள்வதற்காக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் ஆகிய மூவர்கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

இந்த இருதரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. எனவே உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையை மையப்படுத்திய கலந்துரையாடல்கள் நிறைவடையும் வரை சட்டமாதிபர் சஞ்சய் ராஜரட்ணத்தின் ஒத்துழைப்பு அவசியமாகின்றது. இதன் அடிப்படையிலேயே பதவி காலத்தை நீடித்தேன்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்தாா்.