(கல்லடி செய்தியாளர்)
குழந்தை எழுத்தாளர் ஒ .கே. குணநாதன் எழுதிய 57 ஆவது நூலான "அமிர்தகளி மண்ணும் மட்டிக்களி ஆறு " நாவல் வெளியீடு மட்டக்களப்பு அமிர்தகளி ஶ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலய மண்டபத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்றது.
இந்நிகழ்வு கூத்துக் கலைஞர் ஒ.கணபதிப்பிள்ளையின் அகவை நூறு நிகழ்வாக எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் நடத்திய குழந்தை எழுத்தாளர் ஒ.கே. குணநாதன் எழுதிய 57 ஆவது நூல் "அமிர்தகளி மண்ணும் மட்டிக்களி ஆறு" நாவல் வெளியீட்டு நிகழ்வு வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்ட தமிழறிஞர் தமிழ்மணி அகளங்கன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சு செயலாளர் கே .மகேசன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், வைத்திய நிபுணர் பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
அதிதிகள் வரவேற்பு நிகழ்வுடன், மங்கல விளக்கேற்றப்பட்டு கூத்துக் கலைஞரின் நிழலுருவுக்கு மாலை அணிவித்து தமிழ்த்தாய் வணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில், அமிர்தகளி ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயக் குருவின் ஆசியுடன் வரவேற்புரை, தலைமையுரை அரங்கேறியது.
இதன்போது புத்தக அறிமுகவுரையினை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக நாடகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி உமா சிறிசங்கரும், புத்தக விமர்சன உரையினை செங்கதிர் இதழாசிரியர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணனும் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் அமிர்தகளி ஶ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கமாரினால்
குழந்தை எழுத்தாளர் ஒ. கே. குணநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.