நேற்று நாட்டின் பல்வேறு இடங்களில் இடம் பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகிறது .

 


நாட்டின் சில பகுதிகளில் நேற்று (02) இடம்பெற்ற வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (02) காலை மஹபாகேவில் 20 அடி கிளை வீதியில் தப்பஹெனாவத்தை பிரதேசத்தில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த சாரதி, ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

மகுல்பொகுன, ராகம பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை நேற்று மாலை கொட்டாவை அத்துருகிரி வீதியில் மெண்டிஸ் வளைவுக்கு அருகில் அத்துருகிரியவிலிருந்து கொட்டாவை நோக்கி சென்ற முச்சக்கரவண்டியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் கவிழ்ந்து முன்னால் வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, பின்னால் பயணித்த மூவர் மற்றும் காரின் சாரதி ஆகியோர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்தனர்.

42 மற்றும் 54 வயதுடைய ஹிக்கடுவை மற்றும் ஹப்புத்தளை பிரதேசங்களை சேர்ந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நேற்று இரவு நிட்டம்புவ, கொழும்பு - கண்டி வீதியில் முருதாவல சந்திக்கு அருகில் கொழும்பில் இருந்து கண்டி திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நடந்து சென்ற நபர் மீது மோதியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி வட்டுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.