காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டை நோக்கிய மாபெரும் அக்ஸாரியன் நடைபவனியும், பழைய மாணவர் ஒன்றுகூடலும்.





(எம்.எஸ்.எஸ். அஹமட்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட, காங்கேயனோடை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களை  பாடசாலை சமூகத்துடன் இணைக்கும்  "அக்ஸாரியன்" நடைபவனியும், பழைய மாணவர் ஒன்றுகூடல் நிகழ்வும் எதிர்வரும் (21.06.2024)  வெள்ளிக்கிழமை காலை 7.00 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை பாடசாலை வளாகத்தில்  இடம்பெறவுள்ளது.

குறித்த "அக்ஸாரியன் நடைபவனி" நிகழ்வு தொடர்பாக  பழைய மாணவர் சங்கத்தினர் நேற்று (02) மாலை 5.00 மணிக்கு பாடசாலையின் அதிபர் காரியாலயத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ் ஊடகசந்திப்பின் போது பழைய மாணவர் சங்கத்தின் தலைவரும் பாடசாலை அதிபருமான எம்.ஏ.எம். பாயிஸ், பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஏ.பி.எம். லாபீர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுச் செயலாளர் ஏ.எல்.ஏ சிறாஜ் ஆகியோர் அக்ஸாரியன் நடைபவனி நிகழ்வு குறித்து தெளிவுபடுத்தினர்.

காங்கேயனோடை அல் அக்ஸா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களை பாடசாலை சமூகத்துடன் இணைத்து பாடசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக வேண்டி இவ் நடைபவனி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் நடைபவனி நிகழ்வில்  கலந்து கொள்வதற்காக 1985ம் ஆண்டு தொடக்கம் 2020ம் ஆண்டு வரை பாடசாலையில் கல்வி கற்ற சுமார் 1000 பழைய மாணவர்கள் இதுவரை பதிவு செய்துள்ளதாகவும் ஏற்பாடுக் குழுவினர் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த நிகழ்விற்கான டிசர்ட் அறிமுகமும் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.