(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட களுவன்கேணி கிராமத்திற்கு புலம்பெயர் சமூகத்தின் நிதி உதவியில் முன்பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு அதனை கையளிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட களுவன்கேணி-2 கிராமத்தில் மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கான நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் பொது மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பினால் நிதி உதவிகள் வழங்கப்பட்டு, பாடசாலை கட்டிடம், குடிநீர் வசதிகள் என்பன பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அதனை கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், திறப்பு விழா நிகழ்வும் நேற்று நடைபெற்றது.
பாலர் பாடசாலை மாணவர்களால் அதிதிகள் மலர் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதோடு பாலர் பாடசாலையின் பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு, பாடசாலை கட்டிடத்தை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பின் முக்கியஸ்தரான வேலானந்தம் குடும்பத்தினர் திறந்து வைத்தனர்.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட பாலர் பாடசாலை மாணவர்கள் பலர் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மகிழ்ந்தனர்.
மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பின் முக்கியஸ்தர்களான வேலானந்தம் குடும்பத்தினர் கலந்து கொண்டதுடன்.
செங்கலடி ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நபிலா, களுவன்கேணி-2 கிராம உத்தியோகத்தர் விஜயகுமார், சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி கலைநேசன் கயல் விழி, வேல் பரமதேவா, கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எனப் பலர் கலந்து கொண்டனர்.
மேற்படி பாலர் பாடசாலைக் கட்டிடடத்தை அமைக்க சுமார் 18 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான நிதி உதவிகளை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.