தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக வாதாடும் வல்லமை மிக்க சக்தியாக மாறியது- சம்பந்தரின் இரங்கல் செய்தியில் அலி சாஹிர் மௌலானா .

 


 முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு ஆர்.சம்பந்தன்  அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை  தெரிவித்துக் கொள்கிறேன்.

அமரர் திரு.சம்பந்தன் ஐயா அவர்கள் தனது வாழ்வு முழுவதையும்  இலங்கையில் உள்ள தமிழ் மக்களது நீதி, சமத்துவம் மற்றும் அமைதிக்காகவும்
அதற்கான தீர்வினை நோக்கியும்  அயராது முயற்சித்து அதற்காக தன்னை இறுதி மூச்சு வரை அர்ப்பணித்தார்.

தமிழ் சமூகத்திற்காக மட்டும் அல்லாது இலங்கையின் அனைத்து மக்களிற்காகவும் தனது அரசியல் கருத்துக்களை வழங்கி மிகவும் அர்ப்பணத்துடன் ஈடுபட்ட திரு.இரா. சம்பந்தன் ஐயா, தமிழ் மக்களின் உரிமைக்காக தன்னலமற்ற நேர்மையான நேரான பார்வையுடனும்  , அர்ப்பணிப்புடனும் ஜனநாயக வழியில் போராடினார் என்றால் மிகையாகாது,

திரு.சம்பந்தன் ஐயாவின் பங்களிப்புகள் அரசியலுக்கு அப்பாற்பட்டவை, அவர் சமகால அரசியல் தலைவர்களுக்குள் ஓர் ஒளிவிளக்காகவும், அவர்களை எல்லாம் ஊக்குவிக்கின்ற தலைமை பண்புகளையும் பெற்றிருந்தார்.
சகோதர வாஞ்சையுடன் தமிழ் பேசும் மக்களது சமாதான சகவாழ்வுக்காகவும் , அவர்களது நலன்களுக்காகவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவதற்காக
அசைக்க முடியாத நம்பிக்கையுடனும் , தளராத அர்ப்பணிப்புடனும் அவர் காட்டிச் சென்றுள்ள வழிமுறைகள் சமகால இலங்கையின் அரசியல் வரலாற்று ஏடுகளில் , வரலாறு படைத்த நாயகர் வரிசையில் பதிவு செய்யப்பட வேண்டிய முக்கிய அம்சமாக அமைய வேண்டும் .

ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு நம் தேசத்தில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. அவர் தமிழ் மக்களின் நலனுக்காக கடமை உணர்வுடன் கருணையுடனும் கண்ணியத்துடனும் போராடினார், நண்பர்களிடம் இருந்து மட்டுமல்ல அரசியல் ரீதியாக மாற்றுக்கருத்துக்களுடன் எதிர்த்தவர்கள் மத்தியிலும் மரியாதையைப் பெற்ற ஒருவராகவே அவர் திகழ்ந்தார் ,

அவரது தலைமையின் கீழ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக வாதாடும்  வல்லமை மிக்க சக்தியாக மாறியது. அவரது தொலைநோக்கு பார்வையும் வழிகாட்டுதலும் சவால் மிக்க தருணங்களில்    கட்சியை வழிநடத்திச் செல்வதில் பிரதான  கருவியாக இருந்தது, எப்போதும் இலங்கையர்கள் அனைவரதும் ஒளி மயமான  எதிர்காலத்தை நோக்கியதான ஒரு பார்வை அவரிடம்  இருந்தது.

இலங்கை பாராளுமன்றில் மிக மூத்த அனுபவம் நிறைந்த மக்கள் பிரதிநிதியாக அவர் தனது இறுதி மூச்சு வரை மிளிர்ந்த அதே வேளை தான்  சார்ந்த  இனத்தின் உரிமைக்காக எழுப்பிய அவரது உரத்த குரலில் இன்னுமொரு இனத்திற்கு எதிரான இனவாத , மற்றும் குரோதம் நிறைந்த குரல் என்றும் வெளிப்பட்டு நிற்காத, விரோதங்களை கழைந்து பக்குவத்துடன் அனைவரையும் அரவனைக்கும் அரசியல்வாதியாக அவர் செயற்பட்டு நின்றார்.

அவரது கம்பீரமான தோற்றம் , கனீரென்ற சிம்மக்குரல் , அவர் முன்னெடுத்து சென்ற முயற்சிகள் அவரது முன்மாதிரிகள், தலைமைத்துவப் பண்புகள் என்றும் எங்களது மனதிலிருந்த அகற்ற முடியாத  அளவுக்கு பசுமரத்து ஆணியாக பதிக்கப்பட்டுள்ளது .

இந்த இக்கட்டான காலகட்டத்தில் அவரது இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் .
இந்த துக்கத்தில் பங்கு கொள்கின்ற அதே நேரத்தில் அவர் காட்டிச்சென்ற வழிமுறைகள் எதிர்கால சந்ததிகள் அமைதி, நீதி, சமத்துவம் ஆகிய கொள்கைகளை பின்பற்றும் எண்ணத்துடன்  சீர் தூக்கிப் பார்ப்பதற்காக அவரது அரசியல் மரபு , சமூக உணர்வு , கொள்கையில் கொண்டிருந்த உறுதி என்பன எதிர்கால சந்ததியினரை நியாயமான மற்றும் அமைதியான சமூகத்தை கட்டி எழுப்ப தொடர்ந்தும் ஊக்கமளித்துக்கொண்டே இருக்கும்.

அன்னாரின் இழப்பினால் துயர் உற்றிருக்கும் குடும்ப உறவுகள் , நண்பர்கள் , ஆதரவாளர்கள் , அவரை நேசிக்கும் உலகளாவிய தமிழ் மக்கள் என அனைவருக்கும் அவரது இழப்பை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியை இறைவன் வழங்கவேண்டும் என்று பிரார்த்திப்பதுடன், எமது ஆழ்ந்த கவலையினையும் தெரிவித்துக்கொள்கிறேன் .

அலி சாஹிர் மௌலானா
நாடாளுமன்ற உறுப்பினர் - மட்டக்களப்பு மாவட்டம்,
பிரதி தலைவர் - ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்