மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விநியோகிக்கும் வைத்தியர், உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள பேரம் பேசும் வைத்தியர் மற்றும் சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சராக இருந்த வைத்தியரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் வைத்தியர் ஆகியோர் தொடர்பில் அரசும் சுகாதார அமைச்சும் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தனார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வலியுறுத்திய அவர் தொடர்ந்து
பேசுகையில், “யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சாவகச்சேரி வைத்தியசாலையில்
தங்களுக்கு உரிய சேவைகள் கிடைப்பதில்லை என்று ஆயிரக்கணக்கான மக்கள்
ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்னர் குறித்த
வைத்தியசாலையின் அத்தியட்சராக பணியாற்றிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா
அங்கு நடைபெற்ற ஊழல்கள் தொடர்பிலும் வெளியிட்டிருந்தார். இது தொடர்பில்
உடனடியாக நடவடிக்கையெடுத்து அந்த வைத்தியசாலையின்
உரிய சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள அரசும் சுகாதார அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினாா்.